ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மறுநாள் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் நான்கு முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, முதல் முறையாக உலகக்கோப்பை இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆடவர் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் அணியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், ஸ்டார்க் தனது சொந்த மண்ணில் மனைவி அலீசா ஹீலி உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் விளையாடுவதை நேரில் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதனால் இப்போட்டியிலிருந்து விலகுவதற்கு நாங்கள் அனுமதியளித்துள்ளோம். ஏனெனில் இது அவருடைய வாழ்நாளில் மறக்க முடியா நிகழ்வாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்த அணுமதியை வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.