மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி இன்று (ஜன.07) நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய வந்தது. தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா களம் இறங்கினர். ஆனால் வந்த வேகத்தில் ஷஃபாலி வர்மா 1 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் 13, ஸ்மிருதி மந்தனா 23, ஹர்மன்ப்ரீத் கவுர் 6, ரிச்சா கோஷ் 23, தீப்தி சர்மா 30, பூஜா வஸ்த்ரகர் 9, அமன்ஜோத் கவுர் 4, என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் கிம் கார்த், சுதர்லாந்து, மற்றும் ஜார்ஜியா வேர்ஹாம் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீராங்கனைகளான அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அணி 7 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அலிசா ஹீலி 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதையடுத்து பெத் மூனி 20, தஹ்லியா மெக்ராத் 19, ஆஷ்லே கார்ட்னர் 7 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், எல்லிஸ் பெர்ரி மற்றும் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் அணியை வெற்றி பாதைக்கு இழுத்து சென்றனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்களை கைப்பற்றினார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், தற்போது தொடரானது 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. மேலும், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் (ஜன.09) நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:காயம் காரணமாக ரஃபேல் நடால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகல்..!