மும்பை: ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 1 டெஸ்ட் போட்டி மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் விளையாடி வருகின்றது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 8 விக்கெட்டுகள் என்ற வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று (டிச.28) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக யாஸ்திகா பாட்டியா மற்றும் ஷஃபாலி வர்மா களம் இறங்கினர்.
தொடக்கம் முதலே பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தியது. ஷஃபாலி வர்மா 1, ரிச்சா கோஷ் 21, ஹர்மன்ப்ரீத் கவுர் 9 ரன்கள் என வெளியேறினர். இதனைத் தொடர்ந்து, சிறுதி நேரம் நீடித்தது யாஸ்திகா பாட்டியா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூட்டணி. ஒரு கட்டத்தில் அரைசதம் நெருங்கிய யாஸ்திகா 49 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து தீப்தி சர்மா 21, அமன்ஜோத் கவுர் 20 ரன்களும் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி 250 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 82 ரன்களில் அவுட் ஆனார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. பூஜா வஸ்த்ரகர் 62 ரன்களிலும், ரேணுகா தாக்கூர் சிங் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.