மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மார்ச் 26) மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடந்தது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி டெல்லி அணியின் பேட்டர்கள் களமிறங்கி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக கேப்டன் மெக் லானிங் 29 பந்துகளுக்கு 35 ரன்களை குவித்தார். அதேபோல ஷிகா பாண்டே 17 பந்துகளுக்கு 27 ரன்களையும், ராதா யாதவ் 12 பந்துகளுக்கு 27 ரன்களையும், மரிசான் கேப் 21 பந்துகளுக்கு 18 ரன்களையும் எடுத்தனர்.
மறுபுறம் பந்து வீச்சில் மும்பை வீராங்கனைகள் இஸ்ஸி வோங் மற்றும் ஹேலி மேத்யூஸ் தலா 3 விக்கெட்டுகளையும், அமிலியா கெர்ர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். அந்த வகையில் 132 ரன்கள் வெற்றி இலக்குடன் மும்பை வீராங்கனைகள் பேட்டிங்கை தொடங்கினர்.
முதலில் களமிறங்கிய ஹேலி மேத்யூஸ் மற்றும் யாஸ்திகா பாட்டியா கூட்டணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து அதிர்ச்சியை அளித்தது. யாஸ்திகா 3 பந்துகளில் 4 ரன்களுடனும், மேத்யூஸ் 12 பந்துகளில் 13 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இவர்களை அடுத்த வந்த நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 16 ஆவது ஓவரின் முதல் பந்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட்டானார்.
இருப்பினும் 39 பந்துகளுக்கு 37 ரன்களை எடுத்து அணிக்கு வலுசேர்ந்தார். நாட் ஸ்கிவர்-பிரண்ட் தொடர்ந்து ஆட்டமிழக்காமல் விளையாடி 55 பந்துகளுக்கு 60 ரன்களை குவித்து வெற்றியை உறுதி செய்தார்.