மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று (மார்ச் 5) மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் 2ஆவது ஆட்டம் நடந்தது. இந்த போட்டியில் மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உடன் மோதியது.
முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 45 பந்துகளுக்கு 84 ரன்களை குவித்தார். அதேபோல டெல்லி கேப்டன் மெக் லானிங் 43 பந்துகளுக்கு 72 ரன்களையும், மரிசான் கேப் 17 பந்துகளுக்கு 39 ரன்களையும் எடுத்தனர். குறிப்பாக, மெக் லானிங் 14 பவுண்டரிகளை தெறிக்கவிட்டார்.
மறுப்புறம் பந்து வீச்சில் பெங்களூரு அணியின் ஹீதர் நைட் மட்டுமே 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அந்த வகையில், 224 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 23 பந்துகளுக்கு 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சோஃபி டெவின் 11 பந்துகளில் 14 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார்.