ஐதராபாத் :இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் ஆட்டக்காரர் சுப்மான் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் அவரால் விளையாட முடியாமல் போனது. சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தொடர் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு, ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். நாளை (அக். 11) ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது. அதற்காக இந்திய அணி டெல்லி சென்று உள்ளது.
டெல்லி சென்று உள்ள இந்திய அணியில் சுப்மான் கில் பங்கேற்கவில்லை. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சுப்மான் கில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்திலாவது சுப்மான் கில் அணிக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
சுப்மான் கில்லுக்கு பதிலாக இந்திய அணியில் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் மிடல் ஆர்டர் வரிசையில் களமிறங்கிய கே.எல். ராகுல் நிலைத்து நின்று 97 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அதனால் அவர் இனி மிடல் வரிசையிலேயே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலிக்கு அடுத்தபடியாக கே.எல்.ராகுல் இறங்குவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய செய்லாளர் ஜெய் ஷா செய்தியாளர்களை சந்தித்த போது, சுப்மான் கில்லை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ஒயிட் பால் கிரிக்கெட்டில் சும்பான் கில் அபாரமான பார்மில் உள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும் சுப்மான் கில் விரைவில் குணமடைந்து அணியில் இணைவதை ரசிகர்கள் விரும்புவதாக ஜெய் ஷா கூறினார்.
இதையும் படிங்க :England Vs Bangaldesh : டாஸ் வென்று வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு!