மொகாலி (பஞ்சாப்): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரின் முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நாளை தொடங்குகிறது. இத்தொடர் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் ஒரே டி20 தொடர் என்பதால், இந்திய தேர்வுக்குழு உறுப்பினர்கள் சீனியர் வீரர்களான கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது ஆட்டத்திறனை கூர்ந்து கவனிப்பர்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 14 மாதத்திற்குப் பிறகு டி20 போட்டிகளில் களமிறங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரஷித் கான் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் மற்றும் கோலி ஆகியோர் இந்திய அணியை பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற வைத்துள்ளனர்.
ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகிய இருவரும் இத்தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலகக் கோப்பை டி20 அணியில் இடம்பிடித்து, கோப்பை வெல்ல முனைப்பு காட்டுவர் என நம்பப்படுகிறது. முதல் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில், ரோகித் சர்மா இடம் பெற்றிருந்தார். ரோகித், கோலி ஆகிய இருவரும் நாளைய போட்டியில் ரன் வேட்டை நடத்தும் பட்சத்தில், இந்திய அணி எளிதில் வெற்றி பெறும். ஜிதேஷ் சர்மா ஆப்கானிஸ்தான் தொடரில் விக்கெட் கீப்பராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்ப்டுகிறது.
இந்திய அணியின் ஃபினிஷராக ரிங்கு சிங் அல்லது சிவம் துபே களமிறங்குவார் என தெரிகிறது. உள்ளூர் மைதானத்தில் களம் காணும் அர்ஷ்தீப் சிங், இந்திய பவுலிங் குழுவிற்கு தலைமை வகிப்பார். இத்தொடரில், இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும் 8 ஓவர்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.