டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது. பணி சுமை காரணமாக முன்னணி வீரர்களான கோலி , ரோகித் , பும்ரா ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுப்பு வகிப்பார் என பிசிசிஐ அறிவித்தது.
ஆனால் நேற்று காயம் காரணமாக ராகுலும் , குல்தீப் யாதவும் தொடரில் இருந்து விலகியதால் அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாகவும் , ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெறவுள்ள டி-20 உலக கோப்பைக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த தொடரில் இந்திய இளம் படை எப்படி செயல்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.