மவுண்ட் மவுன்கானுய்: ஐசிசி மகளிர் உலகக்கோப்பைத் தொடர் நியூசிலாந்தில் மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், லீக் சுற்று ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
லீக் சுற்றில் இன்று (மார்ச் 16) மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் வங்கதேச அணி மோதியது. மேற்கு இந்தியத்தீவுகள் அணி நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய வலுவான அணியை தோற்கடித்து தொடரில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வியடைந்தது.
வங்கதேசம் vs மே.இ.தீவுகள்
இதனால், அந்த அணியின் நெட் ரன்ரேட் மிகவும் குறைந்துவிட்டதால், அடுத்து வரும் அத்தனை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற இயலும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி 140 ரன்களுக்கு சுருண்டது. மிகவும் எளிய இலக்கு என்ற போதிலும் வங்கதேச அணி மிகவும் மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. மேலும், 47ஆவது ஓவர் வரை 128 ரன்களை எடுத்திருந்த வங்கதேச அணி, 9 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.
வயிறு வலி காரணமா?
இந்நிலையில், 47ஆவது ஓவரின் ஐந்தாவது பந்திற்குப் பின், பீல்டிங்கில் ஈடுபட்டுவந்த வேகப்பந்துவீச்சாளர் ஷாமிலியா கானல் திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதையடுத்து, மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட கானல், தனது வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஆம்புலன்ஸில் ஏறியுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், சிறிதுநேரம் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. வங்கதேச அணி 136 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக, மே.இ. தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றிபெற்றது.
போட்டி முடிந்த பின்னர், மே.இ. தீவுகள் மகளிர் அணி கேப்டன் ஸ்டஃபைனி டெய்லர்,"கானல், அணியின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவர் மீண்டு வருவார் என நம்புகிறேன். அவரை இப்படி பார்ப்பது சற்று கவலையளிக்கிறது" எனத் தெரிவித்தார்.
வேகப்பந்துவீச்சாளரான கானல் மூன்று ஓவர்களை வீசி விக்கெட் இழப்பின்றி 15 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். மேலும், இத்தொடரில், ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள கானல் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆர்சிபியின் புதிய கேப்டன் - அறிவித்த கோலி!