ஐதராபாத் : நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் மோசமான உடற்தகுதியை காட்டி வருவதாகவும், நாளொன்றுக்கு 8 கிலோ இறைச்சியை சாப்பிட்டவர்கள் போல் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளதாகவும் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக சாடி உள்ளார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சற்றும் எதிர்பாராத ஆட்டங்கள் அரங்கேறி வருகின்றன. நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அணி பெரிதும் எதிர்பாராத வகையில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது.
அதேபோல் மற்றொரு ஆட்டமாக முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவி அதிர்ச்சியை அளித்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று (அக். 23) நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை பாகிஸ்தான் அணி கண்டது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றி பாகிஸ்தான் அணி கண்ட மிக மோசமான தோல்வி என வர்ணனை செய்யப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்களின் உடற்தகுதி குறித்து முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக சாடி உள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களின் மோசமான உடற்தகுதியை ஆடுகளத்தில் காண முடிந்ததாகவும், நாளொன்றுக்கு 8 கிலோ இறைச்சியை சாப்பிட்டது போல் பாகிஸ்தான் வீரர்களின் செயல்பாடுகள் காணப்பட்டதாகவும் வாசிம் அக்ரம் விமர்சித்து உள்ளார்.