துபாய்: ஐசிசி ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் அக். 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 24) பாகிஸ்தான் - இந்திய அணிகள் மோதின. அன்றையப் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் தொடக்க பேட்டர்களான பாபர் அஸாம், முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் தங்களின் விக்கெட்டுகளை இழக்காமல், அரைசதம் அடித்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினர்.
நேரலையில் சர்ச்சை கருத்து
இந்த போட்டியின் போது, பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோயப் அக்தர், பாகிஸ்தான் பத்திரிகையாளர், பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் தனியார் தொலைக்காட்சியின் வர்ணனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நேரலையில் யூனிஸ்," ரிஸ்வான் செய்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், இந்துக்கள் அனைவரும் முன்னர் மைதானத்தின் நடுவில் நின்று நமாஸ் செய்ததுதான். அது எனக்கு மிகவும் சிறப்பான தருணமாக இருந்தது" என்றார்.
கைக்கூப்பி மன்னிப்பு
விளையாட்டுப் போட்டியில் மதங்களை குறிப்பிட்டு வக்கார் யூனிஸின் இதுபோன்ற சர்ச்சையாக கருத்து தெரிவித்ததை அடுத்து, பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. முன்னாள் இந்திய வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத், கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ஆகாஷ் சோப்ரா, ஹர்ஷா போக்ளே ஆகியோரும் தங்களின் கண்டனங்களை ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், வாக்கர் யூனிஸ் தனது கருத்துக்கு மன்னிப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " ஒரு உணர்ச்சி பெருக்கில் அந்த கருத்தைக் கூறிவிட்டேனே தவிர பலரின் நம்பிக்கையை புண்படுத்தவேண்டும் என்று நான் அதை கூறவில்லை. எந்தவித உள்நோக்கத்துடனும் நான் இந்த கருத்தைக் வெளிப்படுத்தவில்லை.
என்னுடைய தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விளையாட்டு என்பது மக்களை இனம், நிறம், மதம் கடந்து ஒருங்கிணைக்கக்கூடியது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான வாக்கர் யூனிஸ், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த மாதம்தான் பயிற்சியாளர் பொறுப்பை துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேலிக்குள்ளான முகம்மது ஷமி.. கை கொடுக்கும் ராகுல் காந்தி..!