இந்திய அணியின் நட்சத்திர வீரரும், உலகத்தர பேட்ஸ்மேனாக விளங்குபவர் விராட் கோலி (32). இவர் கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, அடுத்தடுத்து பேட்டிங்கில் பல சதங்களை குவித்து இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக உருவானார்.
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடந்த 2013ஆம் ஆண்டு முதல் விராட் கோலி கேப்டனாக இருக்கிறார்.
கோலியின் கேப்டன்சி
இந்திய அணிக்கு 2012ஆம் ஆண்டு துணைக் கேப்டனாக பொறுப்பேற்ற கோலி, 2014ஆம் ஆண்டு தோனி டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து திடீரென விலகிய பின் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, விராட் கோலியை இந்திய ஒருநாள், டி20 அணிகளுக்கான கேப்டனாக பிசிசிஐ நியமித்தது.
அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர், இந்திய அணி உள்நாடு, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் பல வெற்றிகளை குவித்தது. இருப்பினும், விராட் கோலி தலைமையில் இந்திய அணி எந்த ஐசிசி தொடரையும் கைப்பற்றவில்லை என்ற குறை இருந்துவருகிறது.
ட்விட்டரில் கடிதம்
சமீபத்தில், நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய இந்தியா, நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்து கோப்பையை கோட்டைவிட்டது.
இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ”பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோரிடம் கலந்தாலோசனை செய்த பின்னரே இந்த முடிவை அறிவித்ததாக தெரிவித்துள்ளார்.
விராட் கோலி ட்விட்டரில் வெளியிட்டுள்ள கடிதம் மேலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் என தெரிவித்துள்ள கோலி, டி20 போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குவதையே விரும்புவதாக மனம் திறந்துள்ளார்.
நெக்ஸ்ட் ரோஹித்தா?
இதற்கு முன்னர் சதங்களை குவித்த வந்த விராட் கோலி, கடந்த ஒன்றரை வருடங்களுக்காக ஒரு சதத்தைக்கூட பதிவு செய்ய முடியவில்லை.
தற்போது டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: வாத்தி ரிட்டர்ன்ஸ்: தோனியை கொண்டாடி தீர்த்த நெட்டிசன்ஸ்