தர்மசாலா : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்குவை சந்தித்தார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கடந்த 22ஆம் தேதி இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த லீக் ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பின்னர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்து உள்ளது. இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் லக்னோவில் வைத்து வரும் 29ஆம் தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்நிலையில், தர்மசாலாவில் உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிக் சுக்குவை சந்தித்தார்.
இருவரும் கிரிக்கெட் குறித்து ஆலோசித்துக் கொண்டதாகவும், நியூசிலாந்து அணிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற விளையாடிய விராட் கோலியை இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அணி மெச்சத்தக்க வகையில் உடற்தகுதியுடன் இருப்பதாகவும், உலக கோப்பை வெல்லுக் கூடிய வலிமை கொண்ட அணியாக இந்திய அணி உள்ளதாகவும் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சந்திப்பின் போது, இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, இணை பொருப்பாளர் தேஜேந்திர பிட்டு, முதலமைச்சர் அரசியல் ஆலோசகர் சுனில் சர்மா, எம்.எல்.ஏ சுதிர் சர்மா உள்ளிட்டோர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க வெற்றியில், ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் 49 சதம் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை நூலிழையில் விராட் கோலி நழுவவிட்டார்.
இதையும் படிங்க :Wasim Akram : "8 கிலோ இறைச்சியை சாப்பிட்டால்..." - பாக். வீரர்களை சாடிய வாசிம் அக்ரம்!