பெங்களூரு: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விளையாடியது. இத்தொடர் நேற்றுடன் (ஜன. 17) நிறைவு பெற்றது. இத்தொடரை இந்திய அணி 3-கு 0 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், நேற்று (ஜன. 17) நடைபெற்ற 3வது டி20 போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. 2வது சூப்பர் ஓவரிலேயே இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஜன. 17) நடைபெற்றது 3வது டி20 போட்டி. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்தை சந்தித்தது. 22 ரன்கள் எடுத்திருந்த போதே 4 விக்கெட்களை இழந்து இருந்தது.
ரோகித் சர்மா - ரிங்கு சிங்: ஆனால் அதன்பின் களத்திற்கு வந்த ரிங்கு சிங் கேப்டன் ரோகித் சர்மாவுடன் கைகோர்த்து பொறுப்புணர்வுடன் தனது சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார். இந்த இருவரையும் ஆப்கானிஸ்தான் அணியால் கடைசி வரை தடுக்க முடியாமல் போனதன் விளைவே சற்றும் எதிர்பாராத ஒரு டார்கெட்டை இந்திய அணி ஆப்கானுக்கு நிர்ணயித்தது.
20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் இந்திய அணி சேர்த்தது. தனக்குண்டான பாணியிலேயே ரன்கள் குவித்து வந்த ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுபக்கம் ரோகித் சர்மாவுடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்த ரிங்கு சிங்கோ 69 ரன்களை விளாசியிருந்தார்.