ஹைதராபாத்:மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தை ரசித்த அவரது ரசிகர்கள் #kingisBack என ஹேஷ்டேக் போட்டு கொண்டாடி வருகின்றனர். சதம் மட்டுமல்ல ரன் மெஷின் கோலி, ரெக்கார்ட் பிரேக்கிங்கிலும் தான் இன்னமும் சோடை போகவில்லை என கூறியுள்ளார். அவரது இந்த போட்டி பல்வேறு புதிய சாதனைகளுக்கு வழி வகுத்துள்ளது.
சாதனை மேல் சாதனை: 500வது சர்வதேச போட்டிக்கு மேல் விளையாடிய 4வது இந்திய வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளார் கோலி. முதல் மூன்று இடங்களில் சச்சின் (664), தோனி (535), டிராவிட் (504) ஆகியோர் உள்ளனர். மேலும் சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டும் 10வது வீரர் ஆவார். இதுவரை 500வது சர்வதேச போட்டியில் விளையாடிய எந்த நாட்டு வீரரும் அரைசதம் கூட அடித்தது இல்லை. ஆனால் விராட் கோலி சதமடித்துள்ளார் என்பது மற்றொரு மகுடம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் 5 ஆண்டுகளுக்கு பிறகு கோலி சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் உலகில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் 16வது இடம் பிடித்துள்ள விராட் கோலி டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார். 100 சதங்கள் கடந்து இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி கோலி 8642 ரன்களுடன் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கி அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி நான்காவது இடம் பிடித்துள்ளார். விராட் கோலி அடித்த 29 சதங்களில் 25 சதங்கள் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கி அடித்த சதங்களாகும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி (12) இரண்டாவது இடத்தை முன்னாள் தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் ஜாக் காலிஸுடன் பகிர்ந்துள்ளார். முதலிடத்தை இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் (13) இடம் பெற்றுள்ளார்.