டெல்லி: தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டியை சமன் செய்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. குறிப்பாக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி சமன் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விளையாட உள்ளது. இந்த சூழலில்தான் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, தாங்கள் டி20 போட்டிகளில் விளையாட பிசிசிஐயிடம் ஆர்வம் காட்டியுள்ளனர். இத்தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய அஜித் அகர்கார் தலைமையிலான தேர்வுக் குழு நேற்று (ஜன.05) காணொலி வாயிலாக கூடியது.
2022 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் மோசமான தோல்விக்கு பின்னர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் விளையாடவில்லை. அதேபோல், வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது.
இதற்கான அட்டவணையையும் நேற்று (ஜன.05) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 போட்டிகளில் விளையாட ஆர்வம் தெரிவித்தது கவனம் பெற்றது. இந்நிலையில், 35-36 வயதை கடந்தாலும், ஃபீல்டிங்கில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படக்கூடிய தன்மையை கொண்டவர்கள் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.