கொல்கத்தா:ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில், முன்னாள் இந்திய அணி கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவ்ரவ் கங்குலி நேற்று முன்தினம் (ஆக. 17) கலந்துகொண்டார். அப்போது, கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி கேப்டன்கள் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு,"கேப்டன்களை நான் எப்போதும் ஒப்பிட மாட்டேன். அனைவருக்கும் தனித்துவமான தலைமைப்பண்பு இருக்கும். நான் ஒருவருக்கு தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கிறோம் என்றால், அவரும் நாம் எதிர்பார்க்கிற முறையிலேயே செயல்பட வேண்டும் என்பதில்லை. அது சரியாக இருக்காது. ஒருவருக்கு தலைமை பொறுப்பு கொடுக்கப்படும் போது, அவருக்கு சிறிது கால அவகாசமும் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.
இந்தியா தலைசிறந்த கேப்டன்களை உருவாக்கியுள்ளது. எம்.எஸ். தோனி இந்திய அணி மாற்றத்தை மிக அற்புதமாக கையாண்டு பல வெற்றிகளை பெற்று தந்தார். இந்திய அணியில் மட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். அதன்பின்னர், விராட் கோலி கேப்டன் ஆனார், அவரும் பல்வேறு அசாத்திய சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். அவர் வேறு வித கேப்டானாக இருந்து புதிதாக பலவற்றை செயல்படுத்தினார்.