மும்பை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2019ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கண்ட தோல்விக்கு நியூசிலாந்து அணியை பழிதீர்க்க இந்திய வீரர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் இன்னிங்சை ரோகித் சர்மா மற்ற்ம் சுப்மான் கில் தொடங்கினர். ஆரம்பமே அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா தனது பங்கிற்கு 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.