விசாகப்பட்டினம்: 13வது உலகக் கோப்பை தொடர் கடந்த 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அடுத்த மூன்று நாட்களிலேயே இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் தொடங்கி உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியானது நேற்று (நவம்பர். 23) நடைபெற்று முடிந்தது. அதில் இந்திய அணி கடைசி பந்து வரை சென்று த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷனின் பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமாக மாறியது. அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உள்பட 80 ரன்களை குவித்தார். மறுபக்கம் இஷான் கிஷன் 39 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் என 58 ரன்கள் சேர்த்தார்.
இந்நிலையில், இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றியை பெற்று தந்தது பெருமையாக உள்ளது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்திய அணியை வழிநடத்தியதில் மகிழ்ச்சி. ஒரு கேப்டனாக அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.