தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை தொடர்: வரலாற்றில் முதல் முறையாகத் தகுதி பெற்ற உகாண்டா அணி! - ஜிம்பாப்வே அணி

T20 World Cup 2024: அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு, வரலாற்றில் முதல் முறையாக உகாண்டா அணி தகுதி பெற்றுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக உலகக்கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது உகாண்டா அணி!
வரலாற்றில் முதல் முறையாக உலகக்கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது உகாண்டா அணி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 7:52 PM IST

விண்தோய்க்: ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இத்தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன.

இதில் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா அணிகள் நேரடியாகவும், கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகளும், தரவரிசையின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளும் தகுதி பெற்றன.

மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்றின் படி தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதன் படி நடைபெற்ற தகுதி சுற்றின் முடிவில் ஸ்காட்லாந்து, கனடா, நேபாளம், பப்புவா நியூ கினியா, அயர்லாந்து மற்றும் ஓமன் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. கடைசி இரண்டு இடத்திற்கு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்த நமீபியா 19வது அணியாகத் தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று 20வது அணியை நிர்ணயிக்கும் போட்டியாக, ருவாண்டா - உகாண்டா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ருவாண்டா அணி 18.5 ஓவர்கள் முடிவில் 65 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகியது. அதன்பின் 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய உகாண்டா அணி, அந்த இலக்கை 8.1 ஓவர்களிலேயே சேஸ் செய்து வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக உகாண்டா அணி தகுதி பெற்றுள்ளது. மேலும், ஐசிசி தொடருக்கு உகாண்டா அணி தகுதி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

உலகக் கோப்பை தொடர் கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை மொத்தமாக 8 சீசன்கள் நடைபெற்றுள்ளது. அதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா இரண்டு முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை தொடருக்குத் தகுதி பெற்ற 20 அணிகள்:அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, நெதர்லாந்து, கனடா, வங்கதேசம், ஸ்காட்லாந்து, நேபாளம், ஓமன், பப்புவா நியூ கினியா, நமீபியா மற்றும் உகாண்டா.

இதையும் படிங்க:சென்னையில் நடக்கும் பார்முலா 4 கார் பந்தயம்..! டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details