மும்பை: ஐசிசி நடத்தும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடர் இலங்கையில் நடைபெற இருந்த நிலையில், சில காரணங்களின் பெயரில் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இத்தொடருக்கான அட்டவணை நேற்று ஐசிசி வெளியிட்டது.
41 போட்டிகள் நடைபெற உள்ள இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய அணி 'ஏ' பிரிவில் உள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியாக ஜனவரி 20ஆம் தேதி வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. அதையடுத்து ஜனவரி 25ஆம் தேதி அயர்லாந்து அணியையும், ஜனவரி 28ஆம் தேதி கடைசி லீக் ஆட்டமாக அமெரிக்காவுடன் மோதுகின்றது.
இந்நிலையில், U19 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியை உதய் சஹாரன் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பஞ்சாப் அணிக்காக U14, U16 மற்றும் U19 கிரிக்கெட்டில் மிடில் ஆர்டர் பேட்டராக விளையாடியுள்ளார்.