கொழும்பு:இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று (ஜூலை 18) நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் அறிமுகமான இந்திய வீரர் இஷான் கிஷன், 51 ரன்கள் அடித்தது மட்டுமில்லாமல், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ஒருநாள் போட்டி அரங்கில் தனது பலமான அஸ்திவாரத்தைப் போட்டார். நேற்று அவர் தனது 23ஆவது பிறந்தநாளை கொண்டினார் என்பது கூடுதல் சிறப்பு.
நேற்றைய ஆட்டம் குறித்து இஷான் கிஷன் பேசியுள்ள காணொலியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த காணொலியில்,"என்னுடைய பிறந்தநாள் அன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமானது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. நான் நினைத்த பல்வேறு விஷயங்களை களத்தில் சாத்தியப்படுத்தினேன்.
கொண்டாடி தீர்த்தேன்
நான் உங்களிடம் (இந்திய அணியினர்) சொன்னதுபோல முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தேன். பயிற்சிக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தது, நேற்றைய போட்டியில் எனக்கு மிகவும் கை கொடுத்தது.
அனைவருக்கும் முதல் போட்டியின் தொப்பியை வாங்கும் தருணமானது மிகவும் அலாதியான ஒன்று. அந்த தருணத்தை நான் கொண்டாடி தீர்த்தேன். ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று எண்ணினேன், அது நிறைவேறவில்லை. இருப்பினும், அணியின் வெற்றிக்கு பங்களித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.
இந்திய அணியில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், இலங்கை அணியில் பானுகா ராஜபக்ஷ ஆகியோர் நேற்றையப் போட்டியில் அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நாளை (ஜூலை 20) நடைபெறுகிறது
இதையும் படிங்க: ’ஓரிரு போட்டிகள் ஒரு வீரரின் வாழ்க்கையை முடித்துவிடாது’ - குல்தீப்