திண்டுக்கல்:தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் டி20 தொடர் கடந்த ஜூன் 23ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்கியது. ஜூலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் போட்டிகள் ஏதும் நடைபெறாத நிலையில், தொடரின் 9ஆவது லீக் ஆட்டம் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று (ஜூலை 4) நடைபெற்றது.
இப்போட்டியில், அனிருதா ஸ்ரீகாந்த் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி வீரர்கள் நிதானமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தனர் . அதிகபட்சமாக அந்த அணி வீரர் அரவிந்த் 32 (23), முகமது 27 (18) ரன்களை எடுத்தனர்.
திண்டுக்கல் அணி தரப்பில் சிலம்பரசன் 3, ஹரி நிஷாந்த், சுதீஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதை தொடர்ந்து, 146 ரன்கள் என்ற இலக்குடன், உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் திண்டுக்கல் அணி விறுவிறுப்பாக பேட்டிங் செய்தது. விஷால் வைத்தியா, மணிபாரதி ஆகியோரின் அதிரடியில் திண்டுக்கல் அணி 18.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது. இதனால், திருப்பூர் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.