திண்டுக்கல்: தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் டி20 தொடர் கடந்த ஜூன் 23ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்கியது. திருநெல்வேலி சங்கர் நகர் இந்தியன் சிமெண்ட்ஸ் மைதானத்தில் 6 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இரண்டு நாள் விடுப்பு கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அடுத்த 7 லீக் போட்டிகள் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொடரின் 7ஆவது லீக் போட்டி நேற்று (ஜூன் 30) நடைபெற்றது. இப்போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும்,நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின. மாலை 3.15 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, மழை காரணமாக மாலை 5.20 மணிக்கு தொடங்கியது.
திண்டுக்கல் அணியின் பெவிலியன் போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற நெல்லை அணி கேப்டன் பாபா இந்திரஜித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, களமிறங்கிய திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்கலில் 130 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக விஷால் வைத்தியா 45 (21) ரன்களும், கேப்டன் ஹரி நிஷாந்த் 37 (27) ரன்களும் எடுத்தனர். நெல்லை பந்துவீச்சு தரப்பில் ஸ்ரீநிரஞ்சன் 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அரைசதம் அடித்த பாபா அபராஜித் தொடர்ந்து, நெல்லை அணி பேட்டிங் ஆட வந்தபோது மழை சாரல் பெய்தாலும், அதனை பொருட்படுத்தாமல் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. நெல்லை அணி ஓப்பனர்கள் சூர்யபிரகாஷ் டக் அவுட்டாக, ஸ்ரீநிரஞ்சன் 18 (13) ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த பாபா அபராஜித், சஞ்சய் யாதவ் இருவரும் அரைசதம் அடித்து, 11 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்துவைத்தனர். ஒரு ஓவர் மீதம் இருந்த நிலையில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி, நெல்லை அணி தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
பாபா அபராஜித் 59 (30) ரன்களுடனும், சஞ்சய் யாதவ் 55 (19) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதில், சஞ்சய் யாதவ் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை அடித்து அதிரடியாக ரன்களை குவித்தார். மேலும், சஞ்சய் பந்துவீச்சிலும் 1 விக்கெட்டை கைப்பற்றிய நிலையில், அவரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். புள்ளிகள் பட்டியலில், நெல்லை அணி 6 புள்ளிகளுடன் (3 வெற்றி) முதலிடத்திலும், திண்டுக்கல் அணி 2 புள்ளிகளுடன் (1 வெற்றி, 2 தோல்வி) 5ஆவது இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க:இந்திய மகளிர் கால்பந்து அணியில் முறைகேடு செய்த பணியாளர் இடைநீக்கம்