திருநெல்வேலி: 2022 டிஎன்பிஎல் தொடரின் 6ஆவது லீக் போட்டியில் ரஹில் ஷா தலைமையிலான ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், அனிருதா ஸ்ரீகாந்த் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் நேற்று (ஜுன் 27) மோதின. திருநெல்வேலியில் உள்ள சங்கர் நகர் இந்தியன் சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய திருச்சி அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், திருப்பூர் அணி 18.5 ஓவர்களிலேயே இலக்கை கடந்தது. இதன்மூலம், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி, திருப்பூர் அணி தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது. துஷார் ரஹிஜா 42 (26), முகமது 29 (15) ஆகியோர் கடைசி கட்டத்தில் ரன்களை விரைவாக குவித்து வெற்றிக்கு பக்கப்பலமாக இருந்தனர்.
திருச்சி பந்துவீச்சில் சரவண குமார் 3, பொய்யாமொழி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முன்னதாக, திருச்சி அணி பேட்டிங்கில் முரளி விஜய் மட்டும் 16 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் என 34 ரன்களை குவித்து ஆறுதல் அளித்தார். திருப்பூர் அணி சார்பாக 29 ரன்களையும், 1 விக்கெட்டையும் எடுத்த முகமது ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். புள்ளிகள் பட்டியலில், திருப்பூர் அணி 2 புள்ளிகளுடன் (1 வெற்றி) 3ஆவது இடத்திலும், திருச்சி அணி 2 புள்ளிகளுடன் (1 வெற்றி, 1 தோல்வி) 4ஆவது இடத்திலும் உள்ளன.