திருநெல்வேலி:6ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று (ஜுன் 23) திருநெல்வேலியில் தொடங்கியது. 32 போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஜூலை 31ஆம் தேதி வரை நெல்லை, திண்டுக்கல், கோவை மற்றும் சேலம் ஆகிய மாநகரங்களில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் போட்டியிடுகின்றன.
தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்ஸ் உடன் மோதியது. திருநெல்வேலியில் உள்ள ஐசிஎல் சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் கௌசிக் காந்தி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
நெல்லை பேட்டிங்:இதைத் தொடர்ந்து களமிறங்கிய நெல்லை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பிரதோஷ் ரஞ்சன் பால் 7 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து, பாபா அபராஜித், கேப்டன் பாபா இந்திரஜித் ஆகியோரும் சொற்ப ரன்கள் எடுத்து அடுத்தடுத்த ஓவர்களில் பெவிலியன் திரும்பினர்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், சஞ்சய் யாதவ் உடன் இணைந்து நிலைத்தடுமாறிய நெல்லை அணியை அபாரமான ஆட்டத்தின் மூலம் மீட்டனர். சூர்யபிரகாஷ் நிதானத்தையும், சஞ்சய் அதிரடியையும் கைக்கொள்ள ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. இருவரும் அரைசதம் கடந்து 133 ரன்களை சேர்த்த நிலையில், சூர்யபிரகாஷ் 62 (50) ரன்களில் ஆட்டமிழந்தார்.
சஞ்சய் யாதவ் வெறியாட்டம்: தொடர்ந்து, சஞ்சய் யாதவ் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் குவிக்க மறுமுனையில் அஜிதேஷும் அவருக்கு சற்று கைக்கொடுத்தார். இதனால், நெல்லை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை எடுத்தது. சஞ்சய் யாதவ், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 சிக்ஸர்களுடனும், 5 பவுண்டரிகளுடனும் 87 (47) ரன்களை குவித்திருந்தார். சென்னை பந்துவீச்சு தரப்பில் சந்தீப் வாரியர், மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ், ஹரீஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.