ஐதராபாத் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி மதிப்புமிக்க வீரர், வீராங்கனைகளை ஹால் ஆப் பேம் (ICC Hall of Fame) பட்டியலில் இணைத்து கவுரவித்து வருகிறது.
தற்போது இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான விரேந்தர் சேவாக், இந்திய வீராங்கனை டயானா எடுல்ஜி மற்றும் இலங்கை அணியின் அரவிந்த டி சில்வா ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு உள்ளன. 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள சேவாக் 23 சதங்களுடன் 8 ஆயிரத்து 586 ரன்கள் குவித்து உள்ளார்.
2008 ஆம் ஆண்டு சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சேவாக் 319 ரன்கள் விளாசி தள்ளினார். அதேபோல் 251 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ள சேவாக் அதில், 8 ஆயிரத்து 273 ரன்கள் குவித்து உள்ளார். மேலும், 2011ஆம் ஆண்டு இந்தூரில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் 219 ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் 3வது அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை படைத்தார்.
2011ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெல்ல பெரிதும் உதவிய சேவாக் அந்த தொடரில் மட்டும் 380 ரன்கள் குவித்து இருந்தார். 19 டி20 போட்டிகளில் விளையாடி 394 ரன்கள் சேவாக் எடுத்து உள்ளார். இந்நிலையில் ஐசிசி ஹால் ஆப் பேம் பட்டியலில் சேவாக்கை இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து உள்ளது.
ஐசிசி ஹால் ஆப் பேம் பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டதற்கு சேவாக் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். அதேபோல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை டயானா எடுல்ஜியும் இந்த மதிப்புமிக்க பட்டியலில் இணைந்து உள்ளார். 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 404 ரன், 63 விக்கெட், 34 ஒருநாள் போட்டிகளில் 211 ரன், 46 விக்கெட்டுகளை டயானா எடுல்ஜி கைப்பற்றி உள்ளார்.
30 ஆண்டுகள் இந்திய மகளிர் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்த டயானா எடுல்ஜி 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்நிலையில், டயானா எடுல்ஜியின் பெயரை ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைந்து ஐசிசி கவுரவித்து உள்ளது. விரேந்தர் சேவாக், டயானா எடுல்ஜி ஆகியோரை தொடர்ந்து இலங்கை அணியின் ஜாம்பவான் அரவிந்த டி சில்வாவின் பெயரையும் ஐசிசி இணைத்து பெருமை சேர்த்து உள்ளது.
1996 ஆண்டு காலக்கட்டத்தில் இலங்கை அணிக்காக விளையாடிய டி சில்வா 308 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 9 ஆயிரத்து 284 ரன்களை குவித்து உள்ளார். குறிப்பாக 1996 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தி 107 ரன்கள் விளாசி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி உலக கோப்பை பட்டம் வெல்ல முக்கிய காரணியாக அரவிந்த டி சில்வா விளங்கினார்.
இந்நிலையில், விரேந்தர் சேவாக், டயானா எடுல்ஜி, அரவிந்த டி சில்வா ஆகியோரை ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கவுரவித்து உள்ளது. இதற்கு முன், இந்திய வீரர்கள் பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்பிளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த பட்டியலில் இணந்து உள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :சிறந்த பீல்டருக்கான பதக்கம் வென்ற சூர்யகுமார் யாதவ்!