ஹைதராபாத்: ஒருநாள் உலக கோப்பை முதல் இரண்டு எடிசன்களில் அதாவது 1975 மற்றும் 1979ல் அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய இந்திய அணி 1983ல் உலக கோப்பையை வெல்லும் என யாரும் கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணியை தடுத்து நிறுத்தியது கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி தான். ஆனால் மீண்டும் உலக கோப்பையை வெல்ல இந்திய அணி எடுத்து கொண்ட காலம் 28 வருடம் ஆகும்.
40 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த வாய்ப்பு: 1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி உலக கோப்பை மூன்றாவது எடிசனின் இறுதி போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பை கைப்பற்றியது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹட்ரிக் வெற்றி என்ற கனவை இந்திய அணி தகர்த்தது. குறிப்பாக அந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் டன்பிரிட்ஜ் வெல்ஸில் விளையாடியது ஒரு சிறந்த இன்னிங்ஸ் ஆகும். ஆனால் அந்த இன்னிங்ஸை பற்றி வெறும் கதையாகவே சொல்ல முடியுமே தவிற அதற்கு வீடியோ காட்சிகள் ஏதும் இல்லை என்பதே உண்மை.
ஐசிசி உலக கோப்பை 3வது எடிசன் 20வது போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய சுனில் கவாஸ்கர் மற்றும் ஸ்ரீகாந்த் சோபிக்கவில்லை, இருவருமே டக் அவுட்டில் வெளியேறினர். பின்னர் களம் கண்ட மொஹிந்தர் அமர்நாத் 5, சந்தீப் பாட்டீல் 1, யஷ்பால் சர்மா 9, என்ற ரன்களில் ஆட்டமிழந்தனர். எதிரணியின் பந்து வீச்சாளர்களான பீட்டர் ராவ்சன் மற்றும் கெவின் குர்ரான் இந்திய அணியின் வீரர்களை பதம் பார்த்து கொண்டிருந்தனர்.
கபில் தேவ் - ரோஜர் பின்னி பார்ட்னர்ஷிப்: இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், ரசிகர்களுக்கு இறுதியான நம்பிக்கையாக கேப்டன் கபில் தேவ் இருந்தார். இக்கட்டான சூழ் நிலையில், களம் கண்ட கபில் தேவ் ஆல் ரவுண்டர், ரோஜர் பின்னிவுடன் சேர்ந்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார். தற்போதைய பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.