கயானா: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்றது. இதனையடுத்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது. இதில் கடந்த 3ம் தேதி டிரினிடாட், தரோபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை விழ்த்தியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று (ஆகஸ்ட் 06) கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முதாலாவது ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் 149 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியை கட்டுப்படுத்தினாலும், இந்திய அணியின் பேட்டர்கள் இலக்கை எட்ட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் 6 ரன்களிலும், ஷுப்மன் கில் 3 ரன்களிலும் வெளியேறினர். மிடில் ஆடரில் களம் வந்த பாண்டியா, சாம்சன், அக்ஷர் ஆகியோர் சொதப்பினர். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான திலக் வர்மா மட்டுமே அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றத்தை தந்தார். பந்து வீச்சைப் பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங், சாஹல், குதீப் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் பிராண்டன் கிங், பூரான், கேப்டன் ரோவ்மேன் பவல் ஆகியோர் நம்பிக்கையாக உள்ளனர். தொடர்ந்து சொதப்பி வரும் ஹெட்மியருக்கு இந்த ஆட்டம் சாதகமாக மாறினால் அணிக்கு கூடுதல் பலம். பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஓபேட் மெக்காய், அகேல் ஹொசின் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், அதே உத்வேகத்துடன் தொடர்ந்து முன்னிலை பெற ஆர்வம் காட்டும்.
மேலும், இந்த ஆடுகளத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனான நிகோலஸ் பூரான் ஒரு நாள் போட்டியில் 73 ரன்களும், டி20யில் 74 ரன்கள் என கடைசி இரு போட்டிகளில் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் இன்று மோதும் 27-வது போட்டியாகும். இதுவரை மோதிய 26 ஆட்டங்களில் இந்தியா 17 வெற்றியும், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 வெற்றியும் பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்திற்கு எந்த முடிவும் இல்லை.