சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 19) தொடங்கியது. இந்நிலையில், வார இறுதியான நேற்று (ஜூலை 24) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.
மாலை போட்டி
முதல் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ராயல் நெல்லை கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி, சென்னை 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அதில், நட்சத்திர வீரர் நாராயணன் ஜெகதீசன் மட்டும் 70 பந்துகளில் 95 ரன்களை குவித்திருந்தார். மற்றவர்கள் பெரிதும் சோபிக்காததால் அணி, பரவலான ஸ்கோரையே எடுத்தது. நெல்லை அணி சார்பில், அதிசயராஜ் டேவிட்சன், மோகன் அபினவ் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கடந்த போட்டியில் திருச்சியிடம் போட்டிப் பாம்பாக அடங்கிய நெல்லை அணி, இம்முறை சற்று சுதாரித்துக்கொண்டது. கேப்டன் பாபா அபராஜித் தொடக்க வீரராக களமிறங்கி பொறுப்புடன் ரன் சேர்த்தார்.
வென்றது நெல்லை
மேலும், நடுவரிசை வீரர்களும் அணிக்கு கைகொடுத்தனர். இதனால், நெல்லை அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்து, சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. நெல்லை அணியில் அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்சன் பால் 62 ரன்களும், அபராஜித் 55 ரன்களும் எடுத்தனர்.
இரவு ஆட்டம்
இரவு 7.30 மணிக்கு தொடங்கிய திருப்பூர் - சேலம் அணிகளுக்கு இடையிலான மற்றொரு லீக் போட்டியில், டாஸ் வென்ற சேலம் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, சேலம் அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை அடித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் டேரில் பெராரியோ 40 ரன்களும், அபிஷேக் 38 ரன்களும் குவித்தனர்.
திருப்பூர் அணி வெற்றிக்கு 165 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கியது. அந்த அணிக்கு 30 ரன்களிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் தொடக்கத்தில் சற்று திணறியது. அதன்பின் ரோகின்ஸ் அடித்து விளையாடினாலும் மற்ற வீரர்கள் பாட்னர்ஷிப் அமைக்க தவறியதால், திருப்பூர் அணியும் இலக்கை எட்ட தவறியது.
சேலம் வெற்றி
20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களை மட்டுமே சேர்த்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணியிடம் வீழ்ந்தது. சேலம் தரப்பில் ஜி பெரியசாமி, முருகன் அஸ்வின், பிரனேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். திருப்பூர் அணியில் ரோகின்ஸ் 58 ரன்களை சேர்த்திருந்தார்.
புள்ளிப்பட்டியல்
இந்நிலையில், இரு போட்டிகளிலும் வெற்றி அணிகளான சேலம், நெல்லை அணிகள் முறையே இரண்டாம், நான்காம் இடத்தில் உள்ளன. தோல்வியுற்ற அணிகளான சென்னை, திருப்பூர் அணிகள் முறையே ஆறாவது, ஏழாவது இடத்தில் உள்ளன.
இன்றைய போட்டிகள்
சீசெம் மதுரை பாந்தர்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதும் போட்டி மாலை 3.30 மணிக்கும், திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்குகிறது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 3ஆம் நாள்: களமாடும் முக்கிய இந்திய வீரர்கள்!