மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணியை எதிர்த்து மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணி ஆடிவருகிறது. இதில் டாஸ் வென்ற வெலாசிட்டி அணி கேப்டன் மிதாலி ராஜ் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.
பின்னர் சூப்பர்நோவாஸ் அணிக்காக ப்ரியா புனியா - சமாரி அட்டப்பட்டு இணை களமிறங்கியது. இந்த இணை பவர் ப்ளே ஓவர்களில் நிதானமாக ரன்கள் சேர்க்கத் தொடங்கியது. பார்ட்னர்ஷிப் 30 ரன்களை எட்டியபோது, ப்ரியா புனியா 11 ரன்களில் வெளியேறினார். பின்னர் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா - சமாரியுடன் இணைந்தார்.
பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் சூப்பர்நோவாஸ் அணி 32 ரன்கள் எடுத்தது. களமிறங்கிய நில நிமிடங்களிலேயே அதிரடியாக ஆடத் தொடங்கிய ஜெமிமா, ஏக்தா வீசிய ஸ்லோயர் பந்தில் போல்டாகி வெளியேறினார். பின்னர் கேப்டன் ஹர்மன் - சமாரி இணை இணைந்து, வேகமாக ரன்கள் உயர்த்தியது.
அதிலும் தக்ஷினி வீசிய 11ஆவது ஓவரிலும், காஸ்பெரிக் வீசிய 12ஆவது ஓவரிலும் அடுத்தடுத்து சிக்சர் விளாசி சமாரி ஸ்கோரை உயர்த்தினார். இதனைத்தொடர்ந்து கேப்டன் ஹர்மன் சுனே லூஸ் ஓவரில் சிக்சர் விளாச ஆட்டம் சூடுபிடித்தது.