கொல்கத்தா : இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் இரண்டு ஆட்டங்களிலும் நியூசிலாந்து தோல்வியை தழுவிய நிலையில், 3ஆவது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட ரோகித் சர்மா 31 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
மற்ற தொடக்க வீரரான இஷான் கிஷான் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சூர்யகுமார் யாதவ் (0), ரிஷப் பந்த் (4), ஷ்ரேயாஸ் ஐயர் (25), வெங்கடேஷ் ஐயர் (20), அக்ஸர் பட்டேல் (2), ஹர்ஷல் பட்டேல் (18), தீபக் சஹர் (21*) ஆகியோர் தன் பங்குக்கு ரன்கள் சேர்க்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குப்தில் மட்டும் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்தார்.