துபாய்: ஏழாவது ஐசிசி டி20 உலக்கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கியது. தகுதிச்சுற்றுப் போட்டிகள் அக்.22ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், குரூப் 'ஏ' பிரிவில் இருந்து இலங்கை, நமிபியா அணிகளும், குரூப் 'பி' பிரிவில் ஸ்காட்லாந்து, வங்கதேசம் அணிகளும் 'சூப்பர் 12' சுற்றுக்கு தகுதிபெற்றன.
இதன்பின்னர், 'சூப்பர் 12' சுற்றுப்போட்டிகள் அக்.23ஆம் தேதி தொடங்கின. தொடரின் 18ஆவது போட்டியில் முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கு இந்திய தீவுகள் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று (அக். 26) மோதின.
திணறிய வெஸ்ட் இண்டீஸ்
துபாய் ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை எடுத்தது.
மே.இ. தீவுகள் அணியில் அதிகபட்சமாக லீவிஸ் 56 (35) ரன்களும், கேப்டன் பொல்லார்ட் 26 (20) ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் டுவெய்ன் பிரிடோரியஸ் 3 விக்கெட்டுகளையும், கேசவ் மகராஜ் 2 விக்கெட்டுகளையும், நோர்க்கியா, ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
144 என்ற வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கிய நிலையில், தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பவுமா 2 ரன்களில் அவுட்டானார். ஆரம்பத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய வான்டெர் துஸ்சென் ரீசா ஹென்ட்ரிக்சுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆட்டத்தின் 10ஆவது ஓவரில் ஹென்ட்ரிக்ஸ் 39 (30) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க்ரம் அதிரடியாக விளையாடி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தார்.