துபாய்: ஐசிசி ஏழாவது டி20 உலகக்கோப்பைத் தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் நடைபெறுகிறது. இந்நிலையில், இத்தொடருக்கான தீம் பாடலை அனிமேஷன் வடிவில் தயாரித்து ஐசிசி வெளியிட்டுள்ளது.
90 விநாடிகள் கொண்ட இந்தத் தீம் பாடலை 40 பேர் கொண்ட குழு தயாரித்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தத் தீம் பாடலுக்கு பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.
அனைவரையும் ஈர்க்கும் டி20
‘LIVE THE GAME' என இப்பாடலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. டி20 போட்டிகளைப் போன்று இளமையாகவும், துடிப்போடும் இருக்கும் வகையில் இந்தப் பாடலுக்கு இசையமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் டி20 ரசிகர்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்தப் பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பாடலில், கூடுதல் சிறப்பாக நட்சத்திர வீரர்களான விராட் கோலி, கரைன் பொல்லார்ட், ரஷித் கான், கிளேன் மேக்ஸ்வெல் ஆகியோர் அனிமி அவதார் (Anime Avatar) ஆக இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பாடல் வெளியான பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் பேசியதாவது, “மீண்டும் மீண்டும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை டி20 போட்டிகள் ஈர்த்துவருகின்றன. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் வாணவேடிக்கை காட்ட நான் காத்திருக்கிறேன்" என்றார்.
ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல், ”இந்த டி20 உலகக்கோப்பை அனைவருக்கும் மிகக் கடினமாகவும், பெரும் ஞாபகமாகவும் இருக்கப்போகிறது. தற்போது, பல அணிகள் கோப்பையை வெல்லக்கூடிய அளவிற்கு வலுவாக உள்ளன. அதனால், ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டிதான்" என்றார்.
இதையும் படிங்க: IPL 2021: கொல்கத்தா அணிக்கு 156 ரன்கள் இலக்கு