விசாகப்பட்டினம்:உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதன்படி, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA மைதானத்தில் இன்று (நவ.23) இரவு 7 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.
காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் இட ம்பெறாததால், சூரியகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட உள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியைச் சந்தித்த இந்தியா, சிறிது கால இடைவெளி கூட இல்லாமல் இந்தியாவின் இளம் வீரர்களுடன் அடுத்த தொடருக்குத் தயாராகி விட்டது.
இதனால் தொடரை வெல்வதற்கான முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும், அப்போதுதான் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் தங்களுக்கான இடத்தைப் பிடிக்க முடியும். இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இதுவரை 26 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில், 15 போட்டிகளில் இந்திய அணியும், 10 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மட்டும் முடிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மைதானத்தின் நிலை என்ன?விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA மைதானம், பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக இருந்து வந்தது. ஆனால், சமீபத்திய போட்டிகளில் இங்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது. இதுவரை இங்கு ஒன்பது டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 6 போட்டிகளில் சேஸிங் செய்த அணிதான் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.