கவுகாத்தி:இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா உடன் விளையாடுகிறது. இதில் முதலாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் 2ஆவது போட்டி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது.
முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமாா் யாதவ் 22 பந்துகளுக்கு 61 ரன்களையும், கேஎல் ராகுல் 28 பந்துகளுக்கு 57 ரன்களையும், விராட் கோலி 28 பந்துகளுக்கு 49 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் கேஷவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.