பெங்களூரு : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், அதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், நேற்று (நவ. 13) நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதிக் கொண்டன. இதில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடர்ந்து, நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறந்த பீல்டருக்கான பதக்கம் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவிற்கு வழங்கப்பட்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் முன்னிலையில் சிறந்த பீல்டருக்கான விருதை சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் வழங்கினார்.