கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் சமனில் முடிந்ததை அடுத்து, நேற்று முன்தினம் (டிச.21) முடிவடைந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
முன்னதாக, டி20 தொடரின் 3வது போட்டி கடந்த 14ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க், நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது பீல்டிங் செய்து கொண்டிருந்த சூர்யகுமார் யாதவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன் பின் காயம் காரணமாக மும்பை திரும்பிய அவர், சிகிச்சை பெற்றார். ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ, சூர்யகுமார் யாதவின் இடது கணுக்காலின் 2ஆம் நிலை தசைநாரில் கிழிப்பு ஏற்பட்டதை உறுதி செய்தது.
இந்நிலையில், கணுக்கால் காயம் குணமடைய ஆறு வாரங்கள் வரை ஆகும் என்பதால், ஜனவரி 11ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகி உள்ளார். இது குறித்து பிசிசிஐயின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சூர்யகுமார் யாதவின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு செயல்முறையில் ஈடுபட வேண்டும். மேலும், அவர் இந்த காயத்தில் இருந்து குணமடைய 5 முதல் 6 வாரம் வரை ஆகலாம்" என தெரிவித்தார்.