சென்னை:இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னாவை ரசிகர்கள் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள்.
சென்னை அணிக்கு மோசமாக விளையாடினாலும் ரெய்னாவை யாரும் பெரிதாக தாக்கமாட்டார்கள். 'சின்ன தல' என செல்லமாக அழைக்கும் அளவுக்கு தமிழ்நாடு ரசிகர்களுக்கு ரெய்னா ஃபேவரைட் பிளேயர். அப்படியிருக்க சுரேஷ் ரெய்னாவை ரசிகர்கள் விமர்சிக்கக் காரணம், சென்னையின் பாரம்பரியமே பிராமணர்கள் உடையதுதான் என்பது போல் அவர் பேசியதுதான்.
சின்ன தலைக்கு என்ன சோதனை
கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரின் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும் மோதின. மழையால் இந்தப் போட்டி முழுமையாக ரத்தானது. இப்போட்டியில், நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா வர்ணனை செய்தார்.
வர்ணனையின் போது, சக வர்ணனையாளர் சுரேஷ் ரெய்னாவிடம், சென்னைக்கும் அவருக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கேள்வியெழுப்பினார்.
நானும் என்னை பிராமணன்போல் நினைக்கிறேன்
இதற்குப் பதிலளித்த ரெய்னா, "நான் என்னை பிராமணன் என்று நினைத்துக்கொள்கிறேன். 2004ஆம் ஆண்டில் இருந்து சென்னையில் விளையாடி வருகிறேன். சக அணியினரான அனிருதா ஸ்ரீகாந்த். பத்ரிநாத், எல்.பாலாஜி போன்றவர்களிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொண்டுள்ளேன்.
சென்னையின் கலாசாரமும் நிர்வாகமும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நல்வாய்ப்பாக சிஎஸ்கே அணியின் ஒரு பகுதியாக நான் இருந்திருக்கிறேன். தொடர்ந்து அந்த அணிக்கு விளையாடுவேன்" என்றார்.
வெட்கப்படுங்கள் ரெய்னா
சுரேஷ் ரெய்னாவின் இந்த கூற்றுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். "சென்னை அணிக்கு இத்தனை நாள் விளையாடியும், சென்னை குறித்து புரிதல் இன்மையோட இருப்பதை நினைத்து நீங்கள் வெட்கப்பட வேண்டும்" என ட்விட்டரில் ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர், "ரெய்னா பேசிய வீடியோவைப் பார்த்தேன். நான் ரெய்னாவை நீண்டநாளாக ரசித்து வருகிறேன். இதுபோன்ற கருத்தை இத்தனை நாள்கள் மறைத்திருக்கிறார் என்பதை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது" என தனது மனக்குமுறலை வெளிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் நல்ல 'மாஸ்டர்' - புகழாரம் சூட்டிய 'சின்ன தல'