ஐதராபாத் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்திய உணவகம் என்ற உணவகத்தை திறந்து உள்ளார். ரெய்னாவுக்கு முன்பே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலர் உணவக தொழில் செய்து வருகின்றனர். சச்சின் தெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா, ஜாகீர் கான் உள்ளிட்டோர் ஹோட்டலில் தொழிலில் ரெய்னாவுக்கு முன்பு இருந்தே கொடி கட்டி பறந்து வருகின்றனர்.
கபில்ஸ் லெவன்: இந்திய அணிக்கு முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று தந்த முன்னாள் கேப்டன் கபில் தேவ், கடந்த 2008 ஆம் ஆண்டு பாட்னாவில் லெவன் என்ற பெயரில் ஒரு உணவகத்தைத் திறந்தார். இந்திய, பான் ஏசியா மற்றும் கான்டினென்டல் உணவுகள் இந்த உணவகத்தில் வழங்கப்படுகின்றன. உணவகத்திற்குள் நுழைந்தவுடன் மைதானத்திற்குள் நுழைந்தது போல் உணர்வதற்காக கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் கோப்பைகளின் வடிவில் உணவகம் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஜட்டு புட் பீல்டு: இந்திய அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களில், ரவீந்திர ஜடேஜா 10 ஆண்டுகளுக்கு முன்பே ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து ஜட்டு ஃபுட் ஃபீல்ட் என்ற உணவகத்தைத் தொடங்கினார். கடந்த 2012ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உணவகத்தை தொடங்கினார். இந்தியா, மெக்சிகன், சீன, தாய், கான்டினென்டல் மற்றும் பஞ்சாபி உணவு வகைகள் இந்த உணவகத்தில் வழங்கப்படுகின்றன.
ஒன்8 கம்யூன்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒன்8 கம்யூன் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். டெல்லி மற்றும் கொல்கத்தாவில் ஒன்8 கம்யூன் உணவகங்கள் உள்ளன. உள்ளூர், வெளிநாட்டு உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்கள் என அனைத்து டிஷ்களும் இங்கு கிடைக்கும். தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து அவர் இந்த உணவகத்தை தொடங்கினார்.