மும்பை:2018ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெறும் அதே வேளையில், மறுபுறம் மகளிருக்கான டி20 சேலஞ் தொடரும் பிசிசிஐயால் நடத்தப்படுகிறது. ஐபிஎல் சூப்பர்நோவாஸ், ஐபிஎல் டிரையல்பிளேசர்ஸ், ஐபிஎல் வெலாசிட்டி என மூன்று அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்திய மற்றும் சர்வதேச வீராங்கனைகள் விளையாடுவார்கள்.
ரவுண்ட் ராபின் சுற்று: கடந்தாண்டு கரோனா காரணமாக இந்த தொடர் நடைபெறாத நிலையில், இந்தாண்டுக்கான தொடர் மே 23ஆம் தேதி தொடங்கியது. மூன்று அணிகளுக்கு, மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதி புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.
இந்நிலையில், இந்தாண்டு ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணியும், தீப்தி சர்மா தலைமையிலான வெலாசிட்டி அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டி மும்பையில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நேற்று (மே 28) நடைபெற்றது. போட்டியில், டாஸ் வென்று வெலாசிட்டி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
166 இலக்கு: அதன்படி, சூப்பர்நோவாஸ் 165 ரன்களை அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டியான்ட்ரா டாட்டின் (மேற்கிந்திய தீவுகள்) 62, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் (இந்தியா) 43 ரன்களையும் எடுத்தனர். சூப்பர்நோவாஸ் பந்துவீச்சில் இந்திய வீராங்கனைகள் தீப்தி சர்மா, சிம்ரன் பகதூர், இங்கிலாந்தின் கேட் கிராஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.