லண்டன்: லண்டனில் நடந்து வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் முடிவில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு அறிவிப்பை வெளியிடுள்ளார். 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்டூவர்ட் பிராட் என்றாலே நாம் அனைவருக்கும் யுவராஜ் அடித்த 6 சிக்சர்கள் தான் நினைவுக்கு வரும். அந்த மோசமான நிகழ்வில் இருந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னை சிறந்த வேகப்பந்து வீச்சாளராக நிலை நிறுத்தியுள்ளார். முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் கிறிஸ் பிராடின் மகனான ஸ்டூவர்ட் பிராட் 2007ம் ஆண்டு மைக்கேல் வாகன் தலைமையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 845 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 602 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய 5வது வீரர் என்ற சாதனையைப் படைத்து உள்ளார். இதற்கு முன்னதாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் (800), ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னே (708), இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் அண்டர்சன் (688), இந்திய வீரர் அனில் கும்ளே (619) ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். இந்த பட்டியலில் ஸ்டூவர்ட் பிராட் 5வதாக இணைந்திருக்கிறார். மேலும், இந்த பட்டியலில் இடம் பெற்ற இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் இவர் என்பதும் இதில் அடங்கும்.
இதுவரை சர்வதேச டெஸ்ட்டில் 20 முறை 5 விக்கெட்களையும் 3 முறை 10 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். அதோடு 13 அரைசதம், 1 சதம் என 3640 ரன்களை சேர்த்துள்ளார். இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று இரவு அறிவித்துள்ளார்.