செஞ்சூரியன்: இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில், வரும் 26ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையும், 2வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.
இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்டருமான விராட் கோலி குடும்ப சூழல் காரணமாக அவர் இந்தியாவுக்கு திரும்புகிறார் எனவும், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அணியில் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோலி முன்கூடியே லண்டன் பயணத்தில் இருந்ததாகவும், மீண்டும் அவர் அணிக்கு திரும்பியதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் இந்திய அணியுடன் விராட் கோலி 4 பயிற்சி முகாமில் பங்கேற்று விட்டதாகவும், அதன் பிறகு தான் அவர் லண்டன் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த லண்டன் பயணம் குறித்து பிசிசிஐயிடம் ஏற்கனவே அறிவித்துவிட்டதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணி 1992ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை இதுவரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல சாதனைகளை படைத்துள்ளது.