டெல்லி :ஐசிசி உலக கோப்பை தொடரின் 4வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்காவின் இன்னிங்ஸை தொடங்க குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் தேம்பா பாவுமா களம் இறங்கினர்.
கேப்டன் பாவுமா 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின் வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென், டி காக்குடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தார். சிறப்பாக விளையாடிய இருவரில் முதலில் டி காக் 83 பந்துகளில் சதம் விளாசினார். அதற்கு அடுத்த பந்தை சிக்சர் அடிக்க முயன்று கேட்ச்சாகி டி காக் அவுட்டானார்.
அதனை தொடர்ந்து சதம் அடித்த வான் டெர் டுசென் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் எய்டன் மார்க்ராம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி அதிரடி காட்ட தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 342 எட்டிய நிலையில் கிளாசென் 32 ரன்களுக்கு வெளியேறினார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய மார்க்ராம் 49 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மார்க்ராம் பெற்றார். தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில், 428 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்களை வீழ்த்தினார்.