மும்பை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (அக். 24) நடைபெறும் 23வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயத்தில் இருந்து விடுபட்ட வங்கதேசம் அணியின் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் ஷகில் அல் ஹசன் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கி உள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் இன்னிங்சை குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோர் தொடங்கினர். தொடக்க ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ராஸ்ஸி வான் டர் துஸ்சன் 1 ரன்னில் எல்பிடபிள்யு முறையில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
தொடக்க வீரர் குயின்டன் டி காக்குடன், கேப்டன் எய்டன் மார்க்ராம் இணைந்து விளையாடி வருகிறார். நிதானமாக விளையாடி வரும் இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி ரன்களை சேர்த்தனர். அடித்து ஆடிய கேப்டன் எய்டன் மார்க்ராம் தன் பங்குக்கு 60 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென், தொடக்க வீரர் டி காக்குடன் இணைந்து விளையாடி வருகிறார். மறுபுறம் அபாரமாக விளையாடி டி காக் சதம் அடித்தார். அதிரடியாக விளையாடிய டி காக்கை வெளியேற்ற முடியாமல் வங்கதேசம் வீரர்கள் திண்றினர். 150 ரன்களை கடந்த டி காக்கை ஒருவழியாக ஹசன் மக்முத் பிரித்தார்.
அவரது பந்துவீச்சில் டி காக் 174 ரன்கள் குவித்து நசுன் அகமதிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுபுறம் வங்கதேசம் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஹென்ரிச் கிளாசென் 90 ரன்களை கடந்த போது ஆட்டமிழந்தார். இறுதியில் டேவிட் மில்லர் 4 சிக்சர்கள் விளாசினார். 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது.
டேவிட் மில்லர் 34 ரன்னும், மார்கோ ஜான்சன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஹசன் முகமது 2 விக்கெட்டும், மெஹிதி ஹசன் மிராஸ், சொரிபூல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். வங்கதேசம் அணி வெற்றி பெற 383 ரன்கள் எடுத்தாக வேண்டும்.
இதனை தொடர்ந்து, 383 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கம் மிக மோசமாக அமைந்தது. தொடக்க வீரரான தன்சித் ஹசன் 12 ரன்களுக்கு வெளியேறி விக்கெட் கணக்கை தொடங்கி வைக்க, அடுத்தடுத்து களம் இறங்கிய, நஜ்முல் ஹொசைன் சாண்டோ 0, ஷாகிப் அல் ஹசன் 1, முஷ்பிகுர் ரஹீம் 8, லிட்டன் தாஸ் 22 என ஆட்டமிழந்தனர்.
ஒரு பக்கம் விக்கெட்களை தொடர்ச்சியாக இழந்தாலும், மறுமுனையில், மஹ்முதுல்லாஹ் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்த வண்ணம் வந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் சதமும் விளாசினார். மஹ்முதுல்லாஹ் - முஸ்தாபிசுர் ரஹ்மான் கூட்டணியே அதிகபட்ச பார்ட்னர்ஷிபாக அமைந்தது.
இறுதியில் வங்கதேசம் அணி 46.4 ஓவர்கள் முடிவில் 233 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 149 ரன்கள் வித்தியாசத்தல் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பாக ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்களையும், ரபாடா, லிசாட் வில்லியம்ஸ் மற்றும் மார்கோ ஜான்சன் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர்.
இதையும் படிங்க :தலாய்லாமாவுடன் நியூசிலாந்து வீரர்கள் சந்திப்பு! இமாச்சல் சீசனை அனுபவிக்கும் வீரர்கள்!