பார்ல் :இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்ற நிலையில், அதில் 1-க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும், தொடர்ந்து டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றது.
இதனால் தொடர் 1-க்கு 1 என்ற கணக்கில் உள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச. 21) பார்ல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்பதால் இந்திய வீரர்கள் கடுமையாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு பேட்டிங் சற்று பின்னடைவாக அமைந்தது. நிலைத்து நின்று விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய வீரர்கள் சோபிக்கத் தவறியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.