கேப் டவுன்: இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நேற்று (ஜன.03) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸ் முடிவில் 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் கெயல் வெர்ரின்னே 15 ரன்களும், டேவிட் பெடிங்காம் 12 ரன்களும் அடித்தனர். இந்திய அணியின் சார்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். மற்ற விக்கெட்டுகளை ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதையடுத்து களம் கண்ட இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 34.5 ஓவர்களில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தலா 36 ரன்களும், விராட் கோலி 46 மற்றும் கே.எல்.ராகுல் 8 ரன்களும் எடுத்தனர். மற்ற 7 வீரர்களும் எவ்வித ரன்களும் எடுக்க முடியாமல் டக் ஆவுட் ஆகினர். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 11 பந்துகளில் 6 விக்கெட்களை இழந்தது இதுவே முதல் முறையாகும்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா, லுங்கி நிகிடி மற்றும் நந்த்ரே பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை 98 ரன்கள் பின்னடைவுடன் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, முதல் நாள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 62 ரன்கள் சேர்த்தது.