ஜோகன்னஸ்பர்க்: இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது. அதனைத் தொடர்ந்து, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது.
இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்றைய முன்தினம் (டிச.28) முடிவடைந்தது. அதில், தென் ஆப்பிரிக்கா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. மேலும், 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து, இவ்விரு அணிக்களுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, வருகிற ஜனவரி 3ஆம் தேதி கேப்டவுன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியின் முக்கிய பந்து வீச்சாளரான ஜெரால்ட் கோட்ஸி காயம் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 23 வயதான இவருக்கு, முதல் டெஸ்ட் போட்டியின்போது இடுப்பில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் போட்டியின் மூன்றாவது நாளில் பெரிதானதால், போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 ஓவர்களை மட்டுமே வீசினார். இந்த நிலையில், தற்போது வரவிருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.