கொல்கத்தா : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணியின் அபாரமாக விளையாடிய விராட் கோலி 117 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள், சுப்மான் கில் 80 ரன்கள் குவித்தனர். அபாரமாக விளையாடிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50வது சதத்தை பூர்த்தி செய்தார். 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய ஜாம்பவான் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்து புது உலக சாதனை படைத்தார்.
அதேபோல் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓட்டுமொத்தமாக 701 ரன்கள் குவித்து உள்ள விராட் கோலி, ஒரு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சச்சின் தெண்டுல்கரின் அதிகபட்ச ரன் குவிப்பு சாதனையையும் முறியடித்து புது வரலாறு படைத்தார். இதுவரை, 291 ஆட்டம் 279 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள விராட் கோலி, 72 அரைசதம் 50 சதம் என அடித்து 13 ஆயிரத்து 794 ரன்களை குவித்து சாதனை படைத்து உள்ளார்.