பெங்களூரு:மகளிர் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான வீராங்கனைகள் ஏலம் அண்மையில் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.3.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதுவே ஒரு வீராங்கனை ஏலம் எடுக்கப்பட்ட அதிகபட்ச தொகையாகும்.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் தற்போதைய கேப்டன் டு பிளெஸ்சி ஆகியோர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இதுதொடர்பாக ஸ்மிருதி மந்தனா கூறுகையில், "எனக்கு இந்த பெரிய வாய்ப்பை கொடுத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவை பெற ஆவலுடன் உள்ளேன். பெங்களூரு அணி வெற்றிக்காக 100 சதவீதம் உழைப்பேன்" என கூறினார்.
இதுவரை 113 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மந்தனா, 2,661 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 27.15 ரன்கள் ஆகும். மார்ச் 4ம் தேதி மகளிர் ப்ரீமியர் லீக் டி20 போட்டி தொடங்கும் நிலையில் முதல் ஆட்டத்தில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. மார்ச் 5ம் தேதி பெங்களூரு - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதையும் படிங்க: ஐபிஎல் 2023: முழு அட்டவணை, வீரர்கள் பட்டியல்